மணப்பெண் பார்த்தல்

எப்போது பெண்ணைப் பார்க்கவேண்டும்?
ஒரு ஆண், தான் திருமணம் முடிக்க எலா வகைகளிலும் தயார் என்பதில் உறுதியான பின்னர் தனது துணையை தெரிவு செய்வதற்கு முற்படவேண்டும். இதற்கு மாற்றமாக திருமணம் முடிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னிருந்தே நாற்பது வீட்டிற்கு ஏறி இறங்கி பெண்பார்க்கின்றோம் என்ற பெயரால் வீண் விரயமாக பணத்தை இரைத்து பெண்மக்களைப் பெற்ற பெற்றோரின் வயிற்றிலும் அடிக்கும் நடவடிக்கையை எமது சமூகம் விட்டு விட வேண்டும். இந்நடைமுறையானது பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி ஒரு ஆண் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்தபின்னர், தனக்கு இப்பொழுது திருமணம் முடிக்க முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் பெண் கொஞ்சம் உயரம் அல்லது கட்டை கொஞ்சம் நிறம் காணாது என்றெல்லாம் இலேசாக சொல்லி விடும்போது குறித்த பெண் பாரிய மன உலைச்சலுக்கு ஆளாகின்றாள் என்பதனையும் நமது மாப்பிள்ளைமார் மறந்து விட்டனர்.
பெண்ணின் அனுமதி கேட்க வேண்டுமா?
பெண்பார்ப்பதற்கு குறித்த பெண்ணின் அனுமதி கேட்கத்தேவையில்லை என்பது பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தாகும் இமாம் மாலிக் அவர்கள் பெண்ணுக்கு அறியப்படுத்திய பின்னால் பார்த்தால் அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கூறிய போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்து மிகவும் ஏற்றதாகத் தெரிகின்றது. காரணம் ஒரு ஆண் சில வேளை பெண்ணை விரும்பலாம். சில வேளை விரும்பாமலும் இருக்கலாம். விரும்பவில்லை என்றாலும் கூட குறித்த பெண்ணுக்கு விடயம் தெரியாததால் அவளுக்கு உலவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படப்போவதில்லை. எனவே பெண்ணின் அனுமதியில்லாமலும் குறித்த பெண்ணை பார்ப்பதற்கு ஆணுக்கு அனுமதிக்க முடியும். அதே வேளை இந்த விடயத்தில் பெண்ணை இச்சையோடு பார்ப்பது மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட அம்சங்களாகும்.
நிழற்படத்தின் மூலம் (Photo) நவீன கருவிகள்(video, messenger) போன்றவற்றினூடாக பெண் பார்க்க முடியுமா?
பொதுவாக நபியவர்கள் பெண்ணை பார்ப்பதற்கு அனுமதித்த செய்திகளில் இருந்து மேற்குறிப்பிட்ட நவீன ஊடகங்களின் ஊடாக அவளைப்பார்ப்பதற்கு அனுமதி அளிக்க முடிகின்றது. இது விடயத்தில் மிகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க முடிகின்றது. என்றாலும் இன்றைய சூழலில் அதிகமான தில்லுமுல்லுகள் தங்கையைக் காட்டி அக்காவைக் கொடுக்கும் கில்லாடி வேளைகள் இடம் பெருவதாலும் தரகர்களின் திருவிளையாடல்கள் மலிந்து போய் உள்ளதாலும் இதனை பலர் அனுமதிப்பது கிடையாது. இஸ்லாத்தில் எந்த விடயத்திலும் ஏமாற்றுதலுக்கு இடமில்லை என்பதனை குறித்த தரப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை அனுமதிக்க முடியாது என்பவர்களின் வாதத்திற்கு வழு சேர்க்க பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றனர்.
-
நிழற்பிரதியைப் பொறுத்தவரையில் ஒரு பெண்ணின் யதார்த்தமான உருவத்தை நவீன கருவிகளைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் செய்து அழகு படுத்தலாம்.
-
இதற்கு எதிர் மரையாக நேரடியான தோற்றத்திற்கு மாற்றமான அசிங்கமான தோற்றத்தைக்கூட புகைப்படங்கள் ஏற்படுத்தலாம்.
-
இவ்வாரான புகைப்படங்கள் அல்லது messenger ஊடாக பெண்ணைப்பார்த்து விட்டு சில நயவஞ்சகர்கள் குறித்த பெண்ணை இணையத்தின் internet ஊடாக கேவலப்படுத்த முனையலாம்.
எனவே இது போன்ற காரணங்களினால் இவ்வாரான நவீன வசதிகளினூடாக பெண் பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் ஏற்றமானது. வேறு வழியில்லாமல் இவ்வழிகளில்தான் பார்த்து ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இரு தரப்பும் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்ணுடன் கைலாகு செய்வது அல்லது உறுப்புக்களைத் தொடுவது கூடாது
இன்று சர்வசாதாரணமாகிப்போன கைலாகு (handshaking) செய்வது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இடம்பெறுவதையோ, உறுப்புக்களைத் தொடுவதையோ இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. நபியவர்கள் தெளிவாகவே
நான் பெண்ணுடன் கைலாகு செய்ய மாட்டேன்’ (திர்மதி 1597, நஸாயி 4181, இப்னுமாஜா 2874, அஹ்மத் 6:357)
என கூறியுள்ளார்கள். நபி வழியை எமது வழியாகக் கொண்ட. மேலைத்தேயரின் நாகரீகத்திற்கு ஒப்பாகி ஆண், பெண் கைலாகு செய்வதையும் ஏனைய உறுப்புக்களை தொடுவதையும் தவிர்த்துக் கொள்வது கட்டாயமானதாகும். அதே வேளை முக்கியமான தேவைகளுக்கு அல்லாமல் வீணாக, குறித்த பெண்ணோடு தொலை பேசியினூடாக அரட்டை அடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா?
தொடர்ந்து ஒரு ஆண் பெண் பார்ப்பதன் ஒழுங்கு முறைகளையும் சில சட்டங்களையும் அவதானித்தோம். தற்போது ஒரு பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா என்று பார்ப்போம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணைப் போன்றே தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். எனவே இஸ்லாம் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கும் செவி சாய்த்து பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது. இன்றைய எமது சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது. சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாதுஎன இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெருகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம். அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்றுவிடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறிவிடுகின்றனர். இதனால் எமது சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக தலாக் மற்றும் கணவன் இருக்க இன்னொருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
நாம் ஏற்கனவே பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆண் பெண்ணைப் பார்க்கலாம் என்று சொன்னோம் அதனால் ஏற்படும் பிரதிபலனையும் கோடிட்டுக் காட்டினோம். ஆனால் ஆண் அவ்வாறு பார்த்து விரும்பியதன் பின்னர் நேரடியாக திருமண ஒப்பந்தத்திற்கு செல்லமுடியாது. சில வேளை பாரிய வயது வித்தியாசமான கிழவர்கள் கூட பெண்கள் அனுமதியில்லாமல் அவளைப்பார்த்து விரும்பலாம். அதன் பின்னால் பெண்ணின் அனுமதியையும் பெற்று அவள் பார்த்து OK சொன்னால்தான் பெண்ணுக்குறிய உரிமைகளை வழங்கியவர்களாகவும் அவளின் மனோநிலையை மதித்தவர்களாகவும் ஆக முடியும். எனவே இவ்விடயத்தில் ஆண்கள் கரிசனை செலுத்தி, தான் பார்த்து விரும்பிய அந்தப்பெண்ணுக்கு தன் மேல் விருப்பம் இருக்கிறதா? என்பதை அவள் ஆணைப்பார்த்து உறுதி செய்து கொள்வதற்கும் திருமணத்திற்கு முன் இஸ்லாம் கூறும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து இருமணங்கள் சங்கமிக்கும் திருமண வாழ்வில் இணைந்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் துணைபுரிவாணாக!

Comments

Post a Comment

Popular posts from this blog

கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?

இஸ்லாமும் பாடல்களும்

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்